Skip to main content

'அதிமுகவிற்கு அழைப்பு விடுத்த திருமா'-அரசியல் தலைவர்கள் கருத்து 

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
nn

மதுவிலக்கு தொடர்பாக விசிக நடத்தும் மாநாட்டில் அதிமுகவினரும் பங்கேற்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன்,''எந்த போதை பொருளையும் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு. கள்ளில் மருத்துவ குணங்கள் இருக்கிறது என எங்களையும் சந்தித்து கள் வியாபாரிகள் தெரிவித்தனர்.

எந்த அடிப்படையிலும் எந்தப் போதைப் பொருளையும் நாம் கொள்கை அடிப்படையில் ஏற்க முடியாது. திமுக தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை மூடுவோம் என சொல்லி இருக்கிறார்கள். அதை நினைவூட்டி நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம். இந்த மாநாட்டிற்கு வரவேண்டும் என விரும்புபவர்கள் வரட்டும். அதிமுக கூட வந்து பங்கேற்கலாம். எந்த கட்சியில் இருந்தும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது.  இது தேர்தலுக்கானது அல்ல. இதை தேர்தலோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். எங்களைப் பொறுத்தவரை தேர்தல் கூட்டணி; தேர்தல் அரசியல் என்பது முற்றிலும் வேறு. ஆனால் மக்களுடைய பிரச்சனைக்காக நாங்கள்  மதவாத, சாதியவாத சக்திகளை தவிர மற்ற ஜனநாயக சக்திகளுடன் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது'' என தெரிவித்திருந்தார்.

n

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, ''திருமாவளவன் இப்போதாவது இப்படி கூறியுள்ளார். மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் என இப்போதாவது கேட்டுள்ளார். கடந்த பத்தாண்டு காலம் கூட்டணியில் இருக்கிறார். இந்தியாவிலேயே அதிக மது விற்பனை நடக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடக்கின்ற மாநிலம் தமிழ்நாடு அதுவும் மதுவால். திருமாவளவன் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அது மகிழ்ச்சி'' என தெரிவித்துள்ளார்.

nkn

இதுகுறித்து கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், ''பங்கேற்பது அவர்களுடைய இஷ்டம்'' என ஒற்றை வரியில் பதில் அளித்துள்ளார்.

nkn

அதேபோல சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''விசிக அதிமுகவை அழைத்தால் நல்லது தானே. நல்ல விஷயத்திற்காக சேர்ந்தால் நல்லதுதான். ஒன்றாக சேர்ந்து மாநாடு நடத்துவதில் ஒன்றும் தப்பில்லை. அரசே கூட மதுவிலக்கு விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிற பணியினை செய்து கொண்டு தான் இருக்கிறது'' என்றார்.

nkn

தமிழிசை சௌந்தரராஜன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், ''திருமாவளவன் மதுவுக்கு எதிராக போராடுகிறாராம். அதற்கு அதிமுகவிற்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். மதவாத சக்திகளையெல்லாம் கூட சேர்த்துக் கொள்ள மாட்டாராம். நான் கேட்கிறேன் மதுவை பற்றி பேசும்பொழுது ஏன் மதத்தைப் பற்றி பேசுகிறீர்கள்?  திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்தால் 2026ல் வெற்றி கிடைக்காது என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். இது மதுவுக்கு எதிரான மாநாடு அல்ல கூட்டணிக்கு எதிரான மாநாடு என்று சந்தேகமாக இருக்கிறது. ஜனநாயக சக்திகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்கிறார். பாஜக ஒன்றும் அழைப்பு கொடுப்பார்கள் என்று ஏங்கவில்லை. நாங்கள் ஏற்கனவே மதுவுக்கு எதிராக மிக தீவிரமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆட்சிக்கு வந்து எவ்வளவு நாள் ஆச்சு. மது ஒழிப்போம் என்று சொல்லி தான் ஆட்சிக்கு வந்தீர்கள். முதல்வர் வீட்டுக்கு முன்னாடியே கருப்பு கொடியை காட்டி ஏந்திக்கொண்டு மதுவை ஒழிப்பேன் என்று சொன்னார். ஆட்சிக்கு வந்த பிறகு என்ன செய்தீர்கள்'' என தெரிவித்துள்ளார்.

nkn

திருமாவளவனின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''யார் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம். அதையெல்லாம் நாம் போய் குற்றம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதில் தவறு பார்க்க முடியாது. ஆனால் முதல்வரோடு நெருங்கி தொடர்பில் இருக்கிறார் திருமாவளவன். முதல்வரை எப்போதுமே விரும்புகின்ற ஒரு சிறந்த நண்பராக இருக்கக்கூடியவர் தான் திருமாவளவன். எனவே திருமாவளவன் யாரை அழைத்து இருந்தாலும் அவர் தமிழக முதல்வரை விட்டுப் போக மாட்டார்'' என்றார்.

 

thirumavalavan Calling AIADMK-Opinion of political leaders

பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் இதுகுறித்து தெரிவிக்கையில், ''திமுகவுக்கு திருமாவளவன் ஏதோ ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறார் என நினைக்கிறேன். திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை'' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்