தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கை போன்றே சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யா. இவர் தி.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்துவந்துள்ளார். அதே ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்ற இளைஞர் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் தொடர்ந்து சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்து வந்துள்ளார். நேற்று மதியம் 1.30 மணியளவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சதீஸ் அப்பெண்ணை ஆத்திரத்தில் ரயில்வே ட்ராக்கில் தள்ளிவிட்டுள்ளார்.
அப்பொழுது சென்னை கடற்கரை நோக்கிச்செல்லும் மின்சார ரயில் சத்யாவின் மீது மோதி சம்பவ இடத்திலேயே இளம்பெண் தலை துண்டாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர் சதீஸ் தற்பொழுது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மாணவியின் தந்தை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'ரயில் நிலையங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். கல்லூரி மாணவிகள் சுவாதி, சுவேதா, சத்ய பிரியா ஆகியோர் ரயில் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படி தொடர்ந்து மூன்று மாணவிகள் ரயில் நிலையங்களில் கொல்லப்பட்டுள்ளதால் ரயில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது' என தெரிவித்துள்ளார்.