கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள முதலமைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான 39 ஏக்கர் சுற்றளவில் உள்ள குளத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர் என்று வீரமலை என்ற விவசாயி மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல் வீரமலை மற்றும் அவரது மகன் நல்லதம்பி ஆகியோரை கடந்த 29ஆம் தேதி முதலைப்பட்டியில் அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இந்த சம்பவத்தில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த கொலை தொடர்பாக வீரமலை மகள் அன்னலெட்சுமி குளித்தலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் பிரவீண்குமார் என்பவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
கொலை சம்பவம் நடந்த இடத்தில் திருச்சி சரக டிஜஜி பாலகிருஷ்ணன் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, குளித்தலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த கொலை விவகாரத்தில் துரிதமாக செயல்படாத காரணத்தினால்தான் பாஸ்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று குளித்தலை போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் வீரமலை மகன் அன்னலெட்சுமி நக்கீரன் இணையதளத்திடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ''மூன்று மாதத்திற்கு முன்பு பெருமாள் நடராஜன் என்பவர், கோயிலுக்கு பத்திரிகை படைப்பதற்காக எங்க அப்பாக்கிட்ட வந்து 4 மணிக்கு நீங்க பொங்கல் வையுங்கள் என்று நேரத்தை சொல்லிவிட்டு சென்றார். கோயிலுக்குத்தானே பத்திரிகை படைக்கிறாங்க என்று பொங்கல் படைக்க சொல்கிறார்கள் என்று எங்க அப்பாவும், பொங்கல் படையல் வைத்துக்கொண்டிருந்தார்.
வெளியில் பொங்கல் படையல் வைத்திருந்தால் பலருக்கு தெரிந்திருக்கும். ஒரு அறையில் பொங்கல் படையல் வைத்தருக்கிறார். கதவு சாத்தியிருந்தது. அப்போது ஒருவர் மறைமுகமாக வந்து, நீங்க ராமரா என்று கேட்டுள்ளார். ஆமாம்... ஏன் என்று பதிலுக்கு கேட்டுள்ளார். ஒரு பத்திரத்தை காட்டி அதில் கையெழுத்துபோட சொல்லியிருக்கிறார். அப்பா அதற்கு கையெழுத்து போட முடியாது என்று சொன்னார். ஏன் கையெழுத்து போட முடியாது, கையெழுத்து போடவில்லை என்றால் உன்னை சுட்டுவிடுவேன் என்று ஒரு பிஸ்டலை எடுத்து காட்டியுள்ளார். அப்பா பயந்துவிட்டார். அப்பாவின் பட்டை பெயர் ராமர், ஒரிஜினல் பெயர் வீரமலை. ஒரிஜினல் பெயர் பலருக்கு தெரியாது. ஆகையால் பட்டை பெயர்தானே என்று ராமர் என்று கையெழுத்து போட்டுவிட்டார்.
துப்பாக்கியால் மிரட்டியவர் பொங்கல் வைத்த பானையை கீழே எடுத்து போட்டு உடைத்துவிட்டு, நான் போகும்வரை எந்த சத்தமும் போடக்கூடாது. சத்தம் போட்டால் சுட்டுக்கொன்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். எங்க அப்பா எங்களை கூப்பிடும்போது, மிரட்டியவர் வாலக்காடு சைடு போய்விட்டார். நாங்க வந்து பார்க்கும்போது மிரட்டிய நபர் இல்லை.
உடனே 100க்கும், கோயில் ஈ.ஓ.வுக்கும் போன் செய்தோம். 100க்கு போன் செய்து ரொம்ப நேரம் கழித்துத்தான் பாஸ்கர் சார் வந்தார். (குளித்தலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்). அவர் வந்து, நாங்கள் விசாரிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு 11 மணி வரை இருந்தார்கள். கண்டுபிடித்து தருவதாக சொல்லி இன்று வரை எந்தவிதமான ரியாக்ஷனும் எடுக்கவில்லை.
பெருமாளும், நடராஜனும் தூண்டுதலால்தான் மறைமுகமாக ஒரு நபர் வந்து எங்க அப்பாவை மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர். குளம் சம்மந்தமாக இனி எதற்கும் வரவில்லை என்றுதான் மிரட்டி கையெழுத்து கேட்டுள்ளனர். பாஸ்கர் சார் அன்றைக்கு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று எங்க அப்பாவும், அண்ணனும் உயிரிழந்திருக்க வாய்ப்பே இல்லை''. இவ்வாறு கூறினார்.