தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. விஷ்ணுபிரசாத், காங்கிரஸில் இருந்து வெளியேறி மீண்டும் கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் கொடுத்திருப்பதாக அதிருப்தி தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.
நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி, தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.
எனது தலைவர் ராகுல்காந்தி பணம்தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்.பி. கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு, கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் மாணிக்தாகூர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அன்னை சோனியாகாந்தி அவர்கள் தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழுவில் எடுக்கும் முடிவு ஒவ்வொரு உண்மையான காங்கிர்ஸ் தொண்டனுக்கும் நியாமான முடிவாக கிடைக்கும் ஆன சிலர் விளம்பரதிற்காக காங்கிரஸ் இயக்கதிற்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்.
கட்சிக்காக உழைத்த முன்னாள் மாவட்டதலைவருக்கு அதுவும் சில நூறு ஒட்டில் தோல்வியடைந்தவருக்கு மீண்டும் வந்த தொகுதியை வாங்ககூடாது என சண்டை போட்டு வரவிடமால் தடுத்தவர்கள் இன்று நியாயம் பேசலாமா?
தன் தந்தையால் MLA இப்ப MP வாங்கியவர்கள் இப்ப மகன்களுக்கு கூடாது என தொண்டர்களை ஏமாற்றலாமா? அல்லது பா.ஜ.க.+ அ.தி.மு.க. வை உதவ இந்த குழப்பமா? நான் உட்கட்சி விவகாரத்தை பொது வழியில் இந்த நாள்வரை பேசியதில்லை ஆன இன்று நாடாகங்களின் சீன் அதிகமாக இருப்பதால் உண்மையின் சில துளிகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி விஷ்ணுபிரசாத் எம்.பி.யின் போராட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துவரும் நிலையில், விஜயதரணி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் சீட் தரக்கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே விஷ்ணுபிரசாத் எம்.பி.யின் போராட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது முடிவாகி தொகுதிகளின் பட்டியல் வெளியான நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று அறிவிக்கும் என அக்கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளின் போராட்டம் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் காரணமாக சத்தியமூர்த்தி பவனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.