Skip to main content

“ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு” - வைகோ ஆவேசம்!

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

“Governor Tamil Nadu’s Curse” Vaiko Obsession

 

இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார். 

 

அப்போது பேசிய அவர், ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்திற்காகவே நிறுத்திவைப்பு என்கிறோம் என்றும், நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்தது. இதனை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர் எனவும் கூறியுள்ளார். இக்கருத்துகள் அரசியல் கட்சித் தலைவர்களிடையே பலத்த கண்டனங்களை பெற்று வருகிறது.

 

இந்நிலையில், ஆளுநரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகாரத் திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் ஆளுநர்.

 

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் ஆளுநர் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து ஆளுநர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள்.

 

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்துவிட்டன. சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாகிவிடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்