கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (10.05.2023) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியுள்ளார்கள். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பாகல்கோட்டியில் பசவ ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று சமூக சீர்திருத்தவாதி பசவண்ணர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விஜயபுரா என்ற பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், "பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். கர்நாடக மாநிலத்தில் ஆளும் நாற்பது சதவீத கமிஷன் அரசு மீண்டும் வேண்டுமா? பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினர் வளர்ச்சி பெற பிரதமர் மோடி ஆர்வம் காட்டமாட்டார்" என்று பேசினார்.