சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் இன்று (10.11.2024) அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள், ‘தேமுதிக, விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்துப் பேசுகையில், “விஜய்யின் நிலைப்பாட்டை விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால் மாநாடு நடத்திய பிறகு அவரை மீண்டும் பொதுவெளியில் சந்திக்கவில்லை. அதனால் இன்றைக்கு விஜய் பற்றி என்னிடம் கேட்கின்ற கேள்விக்குப் பதில் என்னவென்றால் விஜய் செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி அதில் இந்த கேள்விகளை அவரிடம் எழுப்ப வேண்டும். அப்போது தான் அவரோடு அவருடைய எண்ணம் என்ன?, வியூகம் என்ன?, கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறாரா? இல்லையா? என்று பதில் அளிக்க வேண்டியவர் விஜய்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதி விஜய் பிரபாகரன் போட்டியிட்ட அந்த தேர்தல் முடிவு வெளியிடுவதற்கு முன்பாகவே மாலை 5 மணிக்கு 40க்கு 40 தொகுதிகளில் வென்றோம் என்று முதல்வர் அறிவிக்கிறார். இது இந்த ஆட்சியின் ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது. அந்த வகையில் 2026இல் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியில் வென்றெடுப்போம் என்று சொல்லி சொல்லி மூளைச் சலவை செய்கிறார்கள். ஆனால் திமுகவிற்கு எந்த அளவுக்கு நம்பிக்கை உள்ளதோ அதற்கும் மேலே எங்களுக்கும் நம்பிக்கை உள்ளது. உறுதியாக இருநூற்று முப்பத்து நான்கு தொகுதிகளிலும் தேமுதிக கூட்டணி வென்றெடுக்கும். இதற்கான பணிகளை இன்றிலிருந்து தொடங்கியுள்ளோம். அதற்கான வியூகம், கூட்டணி எல்லாம் அந்த அந்த காலகட்டத்தில் அறிவிப்பு வரும்.
விஜய் பிரபாகரனுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுப்பது குறித்து, விஜயகாந்த் இருந்த போதும், இப்போதும் மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து மூத்த நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர் என அனைவரும் கலந்து பேசி அடுத்து நடக்க உள்ள செயற்குழு பொதுக்குழுவில் அன்றைக்கு விஜய பிரபாகரன் மட்டுமன்றி மூத்த நிர்வாகிகள் பல பேருக்கும் பல முக்கியமான பதவிகள் அறிவிக்க உள்ளோம். ஒரு நாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை என்பது ஒட்டுமொத்த சென்னைவாசிகளுக்கும் தெரியும். தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து சாலைகளின் நிலைமை எப்படி உள்ளது என்றும் அனைவருக்கும் தெரியும்,. இந்த அரசு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாமல் ஆட்சி பலம், அதிகார பலத்தை வைத்துக் கொண்டு ஒரு மாயை உருவாக்கிக் கொண்டு உள்ளனர். திமுக கூட்டணியில் பல குளறுபடிகள் உள்ளன. 2026 தேர்தல் வரை இந்த கூட்டணி தொடருமா என்று கேள்வி எழுந்துள்ளது” எனத் தெரிவித்தார்.