தமிழ்நாடு அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியல் வரை அனைத்து இடங்களிலும், முக்கிய அரசியல் புள்ளிகள், மாற்ற கட்சியினரை தங்கள் கட்சியின் பக்கம் இழுப்பதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவருவர். அதுபோல், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் எம்.பி. பா.குமார், தான் சார்ந்து இருக்கக்கூடிய அதிமுக கட்சிக்கு மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை தன்னுடைய கட்சி பக்கம் இழுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.
தற்போது அதே திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அதிமுகவினர் பலர், தாங்களாகவே முன் வந்து திமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அப்படி வந்து தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ளக் கூடியவர்கள், அதிமுகவின் நிலை குறித்துக் கூறுகையில், ‘இரட்டை தலைமையில் இருப்பது கடினமானது. எனவே தாய் கழகத்தோடு இணைந்து இருப்பதுதான் சிறந்தது’ என்கிறார்கள்.
இன்று திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்குறிச்சி ஒன்றிய அதிமுக கவுன்சிலர் தமிழரசி, கீழக்குறிச்சி அதிமுக செயலாளர் கிருஷ்ணன் ஆகிய இருவரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் திருவெறும்பூர் ஒன்றிய திமுக செயலாளர் மாரியப்பன் உடனிருந்தார்.