அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''8 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் 15 ஆயிரம் கொடுத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தார்கள். கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நாங்கள் நேர்காணல் நடத்துவோம் என்று சொல்லிப் பணம் வாங்கியுள்ளனர். திமுக நேர்காணல் நடத்தியிருக்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் நடத்தியிருக்கிறது பார்த்திருப்பீர்கள். ஆனால் இவர்கள் யாரிடமும் நேர்காணல் நடத்தவில்லை. பப்ளிக் மீட்டிங் போன்று எல்லோரையும் கூட்டி சில மணிநேரங்களில் அந்தக் கூட்டத்தை முடித்து, அவர்களாகவே வேட்பாளர்களை அறிவித்துக்கொண்டார்கள் என்பது முக்கியமான புகார். ஆட்சிமன்றக் குழு கூட்டப்படுவதே இல்லை. அதுதான் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
சில முக்கிய முடிவுகளை அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து எடுக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் செய்யாமல் தான்தோன்றித்தனமாக இபிஎஸ்சும், அவருக்கு ஒத்துப்போகின்ற ஓபிஎஸ்சும் எடுக்கின்ற முடிவுகள்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, நேற்று (30.11.2021) அன்வர் ராஜாவை எடுத்தார்கள். என்னை அதற்குமுன்பே எடுத்தார்கள். எந்தக் காரணமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தூக்கி எறிகிறார்கள். சீனியராக இருக்கட்டும், யாராக இருந்தாலும் பரவாயில்லை என நீக்கிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் எல்லாம் கிடையாது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். அதிமுகவில் கட்சி விதிகளைத் திருத்தியது சட்டத்திற்கு முரணானது'' என்றார்.