சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடும் படி எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இதற்கு செவிகொடுக்கவில்லை. இதையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை கண்டித்து வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது.
இந்நிலையில் சென்னையில் பாஜகவினர் நூதனமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் இந்திய குடியுரிமை சட்டத்தால் யாரவது ஒருவர் பாதிப்படைந்ததாக நிரூபித்தால் கூட ஒரு கோடி ரூபாய் பரிசு தர தயார் என வெளிப்படையாக சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பை பாஜகவினர் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் பாஜகவினர் சிஏஏ விளக்க பிரச்சார கூட்டங்களை நாடு முழுவதிலும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.