
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அருகில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கிடையே இன்று (15.04.2025) வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை மாணவர் ஒருவர் வெட்டியுள்ளார். உடனடியாக இதனைக் கண்ட ஆசிரியர் மாணவனை தடுக்க முயன்ற போது ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதனால் காயமடைந்த மாணவர், ஆசிரியர் என இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படனர். அரிவாளால் வெட்டிய மாணவன் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை துணை ஆணையர் மற்றும் காவல்துறையினர் பள்ளி வளாகத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் திருநெல்வேலி மட்டுமின்றி தமிழ்கம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் புத்தகப்பையை சுழற்றி முறையில் பரிசோதிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.