புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு புதுச்சேரி அரசு அனுப்பி ஒப்புதல் பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 9ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உரையோடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 13 ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து 13 நாட்கள் காலை, மாலை என 17 அமர்வுகளாக இந்த கூட்டத் தொடர் நடைபெற்றது. கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார் மற்றும் சுயேச்சை உறுப்பினர் நேரு ஆகியோர் 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்' என்று தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்று மாநில அந்தஸ்தின் அவசியம் குறித்து பேசினர். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "மாநில அந்தஸ்துக்காக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் ஒருமனதாக, இவ்வளவு தெளிவாகப் பேசி பார்த்ததில்லை. அவ்வளவு வலி உள்ளது. எனவே இந்த தனி நபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு கொண்டு சென்று மாநில அந்தஸ்து பெறுவோம். மேலும் எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அழைத்துச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்து பெறுவோம்" என்றார்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் செல்வம் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானத்தை அரசு தீர்மானமாக ஏற்றதால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெறும்படி கேட்டுக் கொண்டார். எம்.எல்.ஏக்கள் ஐந்து பேரும் தனிநபர் தீர்மானத்தை திரும்பப் பெற்றனர். அதனையடுத்து மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தும் அரசு தீர்மானம் 14வது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏக்களும் எழுந்து நின்று மேசையை தட்டி ஆரவாரம் செய்து தீர்மானத்தை வரவேற்றனர்.