புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏவான ஜான்குமார் இன்று (16.02.2021) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில் 2வது நிலை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.கவில் இணைந்தார். அவருடன் ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடேய 25 ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் அரசியலில் இருந்தே விலகப் போவதாக அறிவித்தார்.
இதன்பின் தனது அமைச்சர் பதவியை மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமிக்கு அனுப்பி வைத்தார். சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகம், புதுவையில் அரசு அளித்த வீடு, அரசு கார் ஆகியவற்றையும் ஒப்படைத்திருந்தார். மேலும் நேற்று திடீரென தனது எம்.எல்.ஏ. பதவியையும் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினமா செய்து, தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவுக்கு அனுப்பி வைத்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் 10 ஆக குறைந்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் முகாமிட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார், தான் புதுவை திரும்பியதும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் என மூன்று பேர் ராஜினாமா செய்துள்ளனர். பாகூர் எம்.எல்.ஏ தனவேல் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் புதுச்சேரி மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை நியமன எம்.எல்.ஏக்களையும் சேர்த்து 29 ஆக உள்ளது.
15 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால் மெஜாரிட்டி கிடைக்கும் சூழலில் புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 10, தி.மு.க. 3, அரசுக்கு ஆதரவு தரும் சுயேச்சை ஒருவர் என 14 உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல், எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க 4 என 11 பேர் உள்ளனர். மேலும் பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் சேர்த்தால் எதிரணியில் 14 பேர் உள்ளனர்.
15 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் காங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் எனும் பட்சத்தில், 14 பேர் மட்டுமே உள்ளனர். அதேசமயம் எதிரணியிலும் 14 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் காங்கிரசுக்கு அளித்துவரும் ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ. வாபஸ் பெற்றாலோ, அல்லது மேலும் ஒரு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தாலோ காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழக்கும் அபாயம் உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒவ்வொரு எம்.எல்.ஏவாக ராஜினாமா செய்து வரும் சூழலில், ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய ஆளும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுகுறித்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ள சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, "மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆட்சி முடியும் தருவாயிலும், இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிற சூழ்நிலையிலும் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. எனவே ஒட்டுமொத்தமாக அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம்" எனக் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில அரசியலில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் அதிரடி சம்பவங்களால் அரசியல் வட்டம் சூடு பிடித்துள்ளது.