Published on 05/02/2020 | Edited on 05/02/2020
உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு திமுகவில் பல அதிரடி நடவடிக்கைகளை திமுக தலைமை எடுத்து வருகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாண்மையான இடங்களில் திமுக தோல்வியை தழுவியது. இதனால் உட்கட்சி பூசல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் போன்ற காரணங்களால் சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளை அந்த கட்சியின் தலைமை அதிரடியாக மாற்றியுள்ளது. திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம்.செல்வகணபதிக்கு பதில் வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி.எம்.செல்வகணபதியும், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து வீரபாண்டி ராஜா விடுக்கப்பட்டு திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக எஸ்.ஆர். சிவலிங்கமும், நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த செ.காந்திசெல்வன் விடுவிக்கப்பட்டு, அந்த பொறுப்பில் கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்." இவ்வாறு திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஸ்டாலின் எடுத்து வருவதால் அதிமுக சற்று அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் திமுகவிலும் பல்வேறு காரணங்களுக்காக நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருவதால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.