சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று (16.10.2021) மரியாதை செலுத்த இருக்கிறார். சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்குப் புறப்பட இருக்கும் சசிகலா, மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடம் செல்கிறார். அங்கு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் சசிகலா, அதன் பிறகு அதே மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்த இருக்கிறார். ஏற்கனவே கடந்த 2017 பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செய்ததோடு சத்தியமும் செய்திருந்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக போலீசார் பாதுகாப்பு வேண்டும் என சசிகலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சசிகலா சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இது ஒருபுறம் இருக்க, அதிமுக பொன்விழா ஆண்டுக்கான அறிவிப்பை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதற்காக ஞாயிற்றுக்கிழமை (17ஆம் தேதி) எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளதால், அதிமுக சார்பிலும் போலீஸ் பாதுகாப்பு தரக் கோரி மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கையை ஏற்ற காவல்துறை, 16, 17 ஆகிய தேதிகளில் தலைவர்கள் நினைவிடங்கள் உள்ள மெரினாவில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.