
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நேற்று (10.02.2025) மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது பேருந்தில் இடம் பிடிப்பதில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் கந்தகுரு என்ற மாணவரை அவருடன் படிக்கக்கூடிய சக மாணவர் ஒருவர் மார்பு பகுதியில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த கந்தகுரு உடனடியாக எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கந்தகுரு சிகிச்சை பலனின்றி சிகிச்சை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கை பிடிப்பது தொடர்பாக இரு மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடப்பாடி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.