![pmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/ROiUyy-PU2vMKxSf4oXD4EqjPCiMxjLdDQu8Iysu12M/1588570456/sites/default/files/inline-images/918_6.jpg)
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4 ஆம் தேதி (இன்று முதல்) அமலுக்கு வந்தது. இருப்பினும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சலூன் கடைகள் திறக்க அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது. இன்று (04/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,533 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,301- லிருந்து 1,373 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,633- லிருந்து 11,707 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், சென்னையிலும், சென்னை புறநகர் மாவட்டங்களிலும் கரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பது முரண்பாடுதான். விதிகள் தளர்ந்தாலும் நாம் உறுதியாக இருந்தால்தான் கரோனாவிலிருந்து தப்பிக்க முடியும். ஆகவே, ஊரடங்கைக் கடுமையாகக் கடைப்பிடிப்போம் என்றும், கோயம்பேடு காய்கறி மொத்த வணிக சந்தை, மொத்த கரோனா தொற்று சந்தையாக மாறியிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி கோயம்பேட்டில் ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 119. சென்னையில் 52, அரியலூர் 22, விழுப்புரம் 20, கடலூர் 17, காஞ்சிபுரம் 7, பெரம்பலூர் 1 எனப் பட்டியல் நீள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு நன்றி கூறியது, அற்புதமான நன்றிக்கடன். நாம் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை எப்போது கவுரமாக அடக்கம்/தகனம் செய்யப்போகிறோம்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.