
இந்தியர்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் காவல் துறை, கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வதை கருத்துப்படமாக வெளியிட்ட விகடன் பத்திரிகையின் இணையப்பக்கத்தை மோடி அரசாங்கம் முடக்கியிருப்பதற்கு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் கண்டனங்கள் எதிரொலித்தபடி இருக்கின்றன.
இந்நிலையில் இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட விகடன் இணைய இதழான "விகடன் பிளஸ்" இதழில் அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை விலங்கினோடு அழைத்துவரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததையும் குறிப்பிடும் வகையில் கேலிச் சித்திரம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இணைய இதழ் ஒன்றிய அரசால் முடக்கி வைக்கப்பட்டதாக விகடன் தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை சுதந்திரத்திலும் கருத்துச் சுதந்திரத்திலும் ஒன்றிய அரசு தனது சர்வாதிகாரப் போக்கைக் கையாண்டு வருவது வெட்ட வெளிச்சம் ஆகி வருகிறது. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட விகடன் குழுமத்தின் இதழையே தடை செய்திருப்பதால் சிற்றிதழ்களின் நிலை என்ன என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளும் திறனற்ற ஒன்றிய அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்து எல்லை மீறுகிறது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இந்த அராஜக செயலுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கின்றேன்” என்று கண்டித்துள்ளார்.