18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04.06.2024) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆர்வமுடன் நாளைய விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அரசு அதிகாரிகளுக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “எங்கள் அன்பான மரியாதைக்குரிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவைவின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸின் தேசிய தலைவர் என்ற முறையில் நான் உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். 18வது மக்களவைக்கான தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4, 2024) நடைபெறுகிறது. இந்த மாபெரும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றுவதில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையம், மத்திய ஆயுதப்படை, பல்வேறு மாநில காவல்துறை, அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது உத்வேகமும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல், அரசு ஊழியர்களை ‘இந்தியாவின் எஃகு சட்டகம்’ என்று அழைத்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பல நிறுவனங்களை நிறுவி, அவற்றின் உறுதியான அடித்தளத்தை அமைத்து, சுதந்திரத்திற்கான வழிமுறைகளைத் தயாரித்தது காங்கிரஸ் என்பதை இந்திய மக்கள் நன்கு அறிவார்கள். ஒவ்வொரு அரசு ஊழியரும் தனது கடமைகளை உண்மையுடனும், மனசாட்சியுடனும் நிறைவேற்றி, அனைத்து தரப்பு மக்களையும் அச்சம், தயவு தாட்சணியம், பாசம் அல்லது தீய எண்ணம் இல்லாமல் நடத்துவேன் என்று அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆளும்கட்சி, அதன் கூட்டணிக் கட்சியின் மூலம் எந்த அழுத்தமும், அச்சுறுத்தலும், செல்வாக்கும் இல்லாமல் தனது கடமைகளை நீங்கள் ஆற்ற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜவஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத், மௌலானா ஆசாத், சரோஜினி நாயுடு மற்றும் நமது எண்ணற்ற உத்வேகமான உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மட்டுமல்ல, நமது தன்னாட்சி நிறுவனங்களில் அதிகாரத்துவம் மற்றும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்குவதன் மூலமும் உறுதி செய்யப்பட்டது.
கடந்த காலங்களில் ஆளும் கட்சியால் நமது தன்னாட்சி நிறுவனங்களைத் தாக்கி, பலவீனப்படுத்தி, நசுக்கும் முறைகள் தலை தூக்கியுள்ளன. இதனால் இந்தியாவின் ஜனநாயக விழுமியங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவைச் சர்வாதிகார ஆட்சியாக மாற்றும் போக்கு பரவலாக உள்ளது. சில நிறுவனங்கள் தங்கள் சுதந்திரத்தைக் கைவிட்டு, வெட்கமின்றி ஆளுங்கட்சியின் கட்டளைகளை பின்பற்றும் செயல் அதிகரித்து வருவதை பார்க்கிறோம்.
இப்போது முழு அதிகாரத்துவத்தையும் அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டு, தங்கள் கடமைகளை நிறைவேற்றவும், எந்த அச்சம், தயவு அல்லது துவேஷம் இல்லாமல் தேசத்திற்குச் சேவை செய்யவும் வலியுறுத்துகிறது. யாருக்கும் பயப்பட வேண்டாம். அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு முறைக்கும் அடிபணிய வேண்டாம். வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் பயப்படாமல் தகுதியின் அடிப்படையில் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள். நவீன இந்தியாவின் ஸ்தாபக தந்தைகளால் எழுதப்பட்ட துடிப்பான ஜனநாயகம் மற்றும் நீண்டகால அரசியலமைப்பு எதிர்கால சந்ததியினருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்தியாவில் உண்மையான ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.