
திமுகவுக்கு எதிராகத் தினசரி ஏதேனும் ஒரு அறிக்கை கொடுத்து வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்குத் தனது சமூக வலைத்தளத்தில் காட்டமாகப் பதிலடி தந்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி கொடுக்கப்படும் எனப் பகிரங்கமாக ஒன்றிய கல்வி அமைச்சர் மிரட்டி இருக்கிறார்.
‘தமிழ்நாட்டு மக்களை பிளாக்மெயில் (Blackmail) செய்யும் நோக்கோடு திமிராக நடந்தால் தமிழ்நாட்டு மக்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்’ எனக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டு மக்களின் நலனிலும் தமிழ்நாட்டு உரிமைகளில் அக்கறையும் கொண்ட அனைவரும் ஒன்றிய பாஜக அரசின் தடித்தனத்தை எதிர்த்து வருகிறார்கள். வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டு, தனிப்பட்ட பிரச்சனைகளைக் கூட மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகத் திரித்து திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார்?.
சிறு சிறு விவகாரங்களை ஒதுக்கிவிட்டு மாநில பிரச்சனைக்குக் குரல் கொடுக்க வேண்டாமா?. இந்த விவகாரத்திலாவது டப்பிங் குரலில் பதில் சொல்லாமல் நேரடியாய் பதில் சொல்லும் துணிவுள்ளதா பதுங்குகுழி பழனிசாமிக்கு?. இரு மொழிக் கொள்கையே தாரக மந்திரம் என்பதைக் கொள்கை முழக்கமாக முழங்கிய பேரறிஞர் பெயரை வைத்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் எனக் கூறிக்கொண்டு ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பழனிசாமி தயவு செய்து அண்ணாவின் பெயரை விட்டுவிட வேண்டும். எதிரிகள் மட்டுமல்லாது துரோகிகளையும் தமிழ்நாட்டு மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்திருக்கிறார் செந்தில் பாலாஜி.