சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக உயர்மட்டக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார்.
அவர் தனது உரையில், ’’தமிழகத்திற்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல், கேலி செய்தனர். எதிர்ப்பாளர்களே தமிழகத்தில் 2019 மார்ச்சுக்குள் பாஜக எங்கே இருக்கிறது என்று பார்ப்பீர்கள். யார் விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து யார் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு.
என்னைப்போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்தான தினம். தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும்.
கடந்த 70 ஆண்டுகளில் பிற கட்சிகள் செய்யாததை பாஜக தமிழகத்திற்கு செய்துள்ளது. தேர்தலின்போது தமிழக மக்களுக்காக கணக்கு கேட்க வேண்டிய பணியை பாஜகவினர் செய்ய வேண்டும். சாதிவாதம், வாரிசு அரசியல், ஊழலை மோடி அரசு முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது.
ஐமுகூ ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு ஊழல் புகார் கூட இல்லை. 10 கோடி ஏழை மக்களின் ஆசியை பூர்த்தி செய்யும் பணியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.
ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. ரயில் டிக்கெட்டுகளில் தமிழை அச்சிட்ட பெருமை மோடி அரசுக்கே உரியது. தமிழின் பெருமையை காப்பதில் பாஜகவை போல வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. என்றைக்கு பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அன்று தமிழின் பெருமை உயர்த்தப்படும்.
இந்தியாவில் ஊழல் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம். ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும். ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும்’’என்று தெரிவித்தார்.