மத்திய அமைச்சரவையை மாற்றும் பா.ஜ.க.வின் திட்டம் பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, மத்திய அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங்குடன் போன வாரம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது தமிழகத்தில் இருக்கும் தோழமைக் கட்சிகளான பா.ம.க.வையும், த.மா.கா.வையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வது பற்றியும் விவாதித்துள்ளார். அன்புமணியை அமைச்சராக்கி, பா.ம.க.வை நம் கைப்பிடியிலேயே வைத்துக்கொள்வது நம் எதிர்கால அரசியல் திட்டத்துக்கு உதவும் என்று கூறிய மோடி, த.மா.கா. வாசனையும் நினைவூட்டியிருக்கார். அப்போது அமித்ஷா, அவர் கட்சியை பா.ஜ.க.வோடு இணைக்கும் பட்சத்தில் அவரை அமைச்சராக்குவது பற்றி யோசிக்கலாம் என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றியும் தீவிர டிஸ்கஷன் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது அவர் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் வருவதால் அமைச்சரவையில் இருந்து அவரை கழட்டி விடலாம் என்று ஆலோசனை பண்ணியதாக கூறுகின்றனர். அதேசமயம் அவர் ஆதரவாளர்கள், நிர்மலாவின் பதவியைப் பறித்தால், அவரைத் தமிழக பா.ஜ.க. தலைவராக கொண்டு வாருங்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே தமிழிசை என்ற பெண் தலைவர் அமர்ந்திருந்த அந்த நாற்காலியில் இன்னொரு பெண் தலைவரான நிர்மலா அமர்வது சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர். தமிழகத்தில் ஜெயலலிதாவுக்குப் பின் கட்சியின் தலைவராக ஒரு பெண்ணை அமரவைத்த பெருமை நம் பா.ஜ.க.வுக்குதான் உண்டு என்று சீனியர் தலைவர்களிடம் எடுத்துச் சொல்லியதாக கூறுகின்றனர்.