தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அதன்பிறகு அதிமுகவில் ஓ.பி.எஸ். முதல்வராகி, இ.பி.எஸ். முதல்வராகி, சசிகலா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைச் சென்று, டி.டி.வி. தினகரன் தனிக் கட்சி துவங்கி பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. இ.பி.எஸ். முதல்வரானதும் கட்சியின் தலைமை பொறுப்பை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் பிரித்துக்கொண்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என அதிமுக செயல்பட்டு வந்தது.
அதன்பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சி இழக்க, அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் வலுவாக ஒலிக்கத் துவங்கி இ.பி.எஸ். இறுதியாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தார். சட்டத்தின் படியும், அதிகாரத்தின் படியும் அதிமுகவின் தலைமையாக இ.பி.எஸ். முடிவானார். ஆனால், தொண்டர்களின்படி தானே அதிமுகவின் தலைமை என நிரூபிக்க ஓ.பி.எஸ். கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டை முடித்த சூட்டோடு மே மாதம் 8 ஆம் தேதி டி.டி.வி. தினகரனை ஓ.பி.எஸ். நேரில் சந்தித்தார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 7) தஞ்சையில், முன்னாள் அமைச்சரும் ஓ.பி.எஸ். ஆதரவாளருமான வைத்திலிங்கம் மகனின் திருமணம் நடைபெற்றது. இதற்கு வைத்திலிங்கம் டி.டி.வி. தினகரனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற டி.டி.வி. தினகரன் இன்று திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது; “அதிமுக ஒருங்கிணைப்பாளர் நண்பர் ஓ.பி.எஸ். தலைமையில் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் இல்லத் திருமண விழாவில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் நண்பர்களுடன் அமமுக தரப்பில் நாங்கள் கலந்துகொண்டது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
சிலரின் ஆதிக்கத்தால், பண ஆசையால் பிரிந்து வர நேரிட்டது. அரசியலை தாண்டி எனக்கும், ஓ.பி.எஸ்.க்கும் மிக நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து பணியாற்றுவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஜெயலலிதாவின் 30 ஆண்டுகால இலட்சியத்தை தொண்டர்களிடம் எடுத்துச் செல்லவும், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டிற்கு வழங்கவும் அமுமக, அதிமுகவுடன் இணைந்து செயலாற்ற துவங்கிவிட்டது. இது இயற்கையாக நிகழ்ந்த இணைப்பு. இந்த இணைப்பு வருங்காலங்களில் துரோகிகளுக்கு பாடம் புகுட்டி, திமுகவை வீழ்த்தி உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவர நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.