கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் இருந்தன. இந்நிலையில், 11 ஆம் தேதி (நேற்று) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக 136 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 136 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் ஆகியோர் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பார்வையாளர்கள் கலந்து கொண்டு எம்.எல்.ஏக்களின் கருத்துகளைக் கேட்டறிவர்.
அதில் சட்டமன்ற கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பான எம்.எல்.ஏக்களின் கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெரிவிக்கப்படும். இதன்பின் புதிய முதலமைச்சர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.