கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளை கட்சி இணைந்து தேர்தலை சந்தித்தது. விழுப்புரம், சிதம்பரம் உள்ளிட்ட, இரண்டு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி இரண்டிலுமே வெற்றி பெற்றது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு 2500க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எழுத்தாளர் ரவிக்குமார் பாமக வேட்பாளரை வீழ்த்தி வெற்றிபெற்றார். இரண்டு தினங்களுக்கு முன் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி, அவரது தாயாரோடு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு அளித்தார் திருமாவளவன். இதுதொடர்பான விவரம் எதுவும் முன்கூட்டியே திமுக தரப்புக்கு தெரியாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கடந்த வாரம் என்.ஐ.ஏ விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் திமுகவை விமர்சிக்கும் தொனியில் வெளிப்படையாக சில கருத்துக்களை பேசியிருந்தார். என்.ஐ.ஏ.மசோதா விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல என்றும், அதுபற்றி விமர்சிக்காமல் கள்ளமவுனம் காக்க முடியாது என பேசியிருந்தார். அதையும் தாண்டி என்.ஐ.ஏ.மசோதாவுக்கு திமுக ஆதரவளித்ததால் அந்தக் கட்சி காலத்திடம் பதில் சொல்ல வேண்டும் என கூறியிருந்தார்.