கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706- லிருந்து 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598- லிருந்து 5,815 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 1,01,497 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவல் குறித்தும், எப்படிக் கட்டுப்படுத்துவது என்று விவாதம் ஒன்று ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்பட சில பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அப்போது கமல்ஹாசன் பேசும் போது கரோனா வைரஸை கேரள அரசு சிறப்பாகக் கட்டுப்படுத்தியுள்ளது என்று கேரளா சுகாதாரத்துறைக்கு பாராட்டைத் தெரிவித்தார். அதோடு தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து பேசிய கேரளா சுகாதாரத்துறை அமைச்சர், தமிழகத்திலும் சுகாதாரத்துறை சிறப்பாகச் செயல்பட்டு கரோனா வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனால் தமிழக அரசுக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் தமிழக அரசின் செயல்பாட்டை நடிகர் கமல்ஹாசன் குறை கூறிவரும் நிலையில் கேரளா அமைச்சர் பாராட்டியது நிகழ்ச்சியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது என்று கூறுகின்றனர்.