தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதலமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 4 பேர் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். அதாவது திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன், சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி தொகுதி எம்.எல்.ஏவான ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்களான நாசர் மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய 4 பேரும் அமைச்சரவையில் இடம்பெற உள்ளனர். அதே சமயம் தமிழக அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரன் அரசு கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, பொன்முடி, மெய்யநாதன், ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மதிவேந்தன் ஆகிய 6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேற்று (28.09.2024) இரவு அவரது முகாம் அலுவலகத்தில், சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை அளித்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை, பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். ‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கலைஞர் வகுத்துத் தந்த பாதையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டலில், சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.