Skip to main content

மக்கள் நீதி மய்யத்தில் கமலின் அதிரடி அறிவிப்பு! தொண்டர்கள் மகிழ்ச்சி! 

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

நாடாளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் புது வாக்காளர்களை பெருமளவு கவர்ந்தது. நகர்ப்புற பகுதியில் மக்கள் நீதி மய்யத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதோடு மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் ஒரு இலட்சத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று மூன்றம் இடம் பிடித்தது. அதே போல் கிராமசபை கூட்டம் நடத்தி கிராமப்புற பகுதிகளிலும் கட்சியை கொண்டு சேர்த்தனர். இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற சில வியூகங்களை வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.   
 

mnm



இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசியல் மக்கள் நலனை விட்டு விலகியும், சுயநலம் மிக்கதாகவும், தரம் தாழ்ந்தும், தன் பாரம்பரிய பெருமைகளை இழந்து நின்ற ஒரு சூழலில், அரசியல் நாகரீகத்தை மீட்டெடுக்கவும், மீண்டும் மக்களுக்காகப் பாடுபடும் ஒரு அரசியல் கட்சியினை உருவாக்கிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலும், என்னால் ஆரம்பிக்கப்பட்டது தான் மக்கள் நீதி மய்யம் கட்சி அதன் காரணமாகவே நமது கட்சி, ஆரம்பித்த 14 மாதத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை துணிவுடன் சந்தித்தது. அனைத்துத் தரப்பினரும் ஒத்துக்கொள்ளும் வகையிலான பெரும் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் அளித்தனர்.அந்த ஆதரவை மேலும் அதிகப்படுத்தி, வரும் 2021ல் மக்கள் நலன் விரும்பும் ஒரு நல்லாட்சி அமைத்திட, உத்வேகத்துடன் பாடுபடுவதென்று முடிவு செய்து, நமது கட்சியை வலுப்படுத்தும் சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு விரும்பினேன். 
 

mnm



தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும், கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக சந்திக்கும் வண்ணம் கட்சி நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்தேன். அந்த வகையில் நமது கட்சி, தலைவரின் கீழ் துணைத்தலைவர், ஆறு பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வண்ணம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் வரை சென்றடையப் பொதுச்செயலாளர் அமைப்பு - வடக்கு மற்றும் கிழக்கு & தெற்கு மற்றும் மேற்கு என்று இரண்டு பதவிகளாக உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடி வரை சென்றடையப் பொதுச்செயலாளர் - ஒருங்கிணைப்பு என்கின்ற பதவி உருவாக்கப்படுகிறது. இத்துடன் பொதுச்செயலாளர் - கொள்கை பரப்பு, பொதுச்செயலாளர் - சார்பு அணிகள், பொதுச்செயலாளர் - தலைவர் அலுவலகம் என்றும் ஏற்படுத்தப்படுகிறது. 


மேலும் தமிழகம் முழுக்க கட்சி நிர்வாகத்தினை எளிமைப்படுத்திடும் வகையில், சென்னை , காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி என்று 8 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கு அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவில் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  புதிதாக நியமிக்கப்படும் மாநிலச் செயலாளர்கள் அந்தந்த மண்டலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பு பதவிக்கு அருணாச்சலம், பொதுச்செயலாளர் அமைப்பு பதவிக்கு மெளரியா, மற்றொரு பொதுச்செயலாளர் அமைப்பு பதவியை தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வை கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுச்செயலாளர் கொள்கை பரப்பு பதவிக்கு ரங்கராஜன், பொதுச்செயலாளர் சார்பு அணிகள் பதவிக்கு உமா தேவி மற்றும் பொதுச் செயலாளர் தலைவர் அலுவலகம் பதவிக்கு பஷீர் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை இப்போது இருந்தே கமல் தீவிரமாக இறங்கிவிட்டதாக சொல்கின்றனர்.  

சார்ந்த செய்திகள்