தமிழக சட்டமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு குறுகிய அவகாசமே உள்ள நிலையில், திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளும், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட பிற கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, மார்ச் 12ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி வேட்பாளர்கள், வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவருகின்றனர். அதன்படி நேற்று திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில், அதிமுக சார்பாகப் போட்டியிடும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின்போது சொத்து விவரம் குறித்த சுய உறுதிமொழி பத்திரமும் (அஃபிடவிட்) தாக்கல் செய்யவேண்டும். தாக்கல் செய்த அஃபிடவிட்டில், தனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 246.76 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். இதில், அசையா சொத்துகள் ரூ. 239.9 கோடி என்றும் அசையும் சொத்துகள் ரூ. 6.86 கோடி என்றும் தெரிவித்துள்ளார். இந்த மொத்த சொத்தில், அவருக்கு கடன் ரூ. 5.17 கோடி இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை வேட்பு மனுத் தாக்கல் செய்ததிலேயே மநீம தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பே முதல் இடத்திலிருந்தது. அவரது சொத்து மதிப்பு என அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தது ரூ.176.9 கோடி. இசக்கி சுப்பையா 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். அப்போது அவர் தனது மனுவில் ரூ.2.02 கோடி அசையும் சொத்துகளும், தனது பெயரில் சொந்தமாக ஒரு வாகனம்கூட இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், திருநெல்வேலி ரரக்கள் அதிர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.