
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் சக்கரம் கழண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தப்பியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 52 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை பாலச்சந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார். சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பேருந்தில் பயணம் செய்தனர். தொடர்ந்து பேருந்து ராசிபுரம் ஆர்டிஓ அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன் சக்கரம் கழண்டு ஓடியது. இதில் சாலைக்கு சக்கரத்தின் அச்சுக்கும் இடையே உராய்வு ஏற்பட்டு சத்தம் கிளம்பியதால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
உடனடியாக பேருந்து ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தினார். சக்கரம் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தது. இதனால் பேருந்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர். பின்னர் தகவலறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பேருந்தின் சக்கரத்தை மீண்டும் பேருந்தில் பிட் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.