
'எதையோ எதிர்பார்த்து தனக்கு வழங்க வேண்டிய கல்விக் கடனை கடைசி நேரத்தில் ரத்து செய்து விட்டனர்' என லண்டன் சென்று பிஜி படிக்க வேண்டும் என கனவில் இருந்த ராமநாதபுரம் மாணவர் வங்கி வாசலில் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காவா குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் ராம். இவர் பிஜி பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவில் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் முறையாக பதிவேற்றம் செய்து அதற்குரிய விண்ணப்பத்தையும் எடுத்து வந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு பணம் பல லட்சங்கள் செலவாகும் என கூறியதையடுத்து, கீழக்கரையில் உள்ள ஒரு தேசிய வங்கிக்கு சென்று விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள வங்கி கிளைக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் வங்கியில் கேட்ட அனைத்து ஆவணங்களும் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முறையாக வங்கியின் வழக்கறிஞர் கேட்ட அனைத்தையும் கொடுத்த பிறகு தொகை அதிகமாக இருந்ததால் ஏதாவது சொத்து பத்திரம் அடமானமாக கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனது உறவினருடைய 60 லட்சம் சொத்து பத்திரத்தையும் கொடுத்துள்ளனர். ஆனாலும் வங்கியில் உள்ள உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கடைசி வரை எதையோ எதிர்பார்த்து தனக்கு கல்விக்கடனை வழங்காமல் கடைசி நாளான இன்று தங்களுடைய கல்விக் கடன் வழங்க இயல முடியாது என தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளதாக தெரிகிறது.

இதனால் என்ன செய்வதென தெரியாமல் வங்கி வாசலிலேயே அந்த இளைஞர் கவலையுடன் அமர்ந்து வேதனை தெரிவித்தார். மேலும் பதிவேற்ற கட்டணமாக சுமார் நான்கரை லட்சம் வட்டிக்கு வாங்கி கட்டியதாகவும் முன்னதாகவே கடன் வழங்க முடியாது என தெரிவித்திருந்தால் இந்தத் தொகையாவது வட்டிக்கு வாங்கி செலுத்தி இருக்க மாட்டேன் என கண்ணீர் மல்க கூறினார்.இதுபோன்று இழுத்தடிப்பு செய்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அரசுகள் என்னதான் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கினாலும் இது போன்ற சில வங்கிகளில் மாணவர்களை அலைக்கழிப்பு செய்து மேற்படிப்பு படிக்க முடியாமல் சில மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் வேறு பணியை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.