பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள பன்னாட்டு அமைப்புகளும், பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் உலகின் பிற நாடுகளை விட இந்தியா அதிகமாக பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அதை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நமது மக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வு இல்லை.
காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் மருத்துவர் அய்யா அவர்கள் தொடர் அறிக்கைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். காலநிலை மாற்றத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு அரிசி, கோதுமை, சோளம், சோயா ஆகிய நான்கு முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறையும். 2050&ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் 60 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள். இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஒருபுறம் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், கடுமையான உடல்நல பாதிப்புகளும் உருவாகும்.
காலநிலை மாற்றத்தின் விளைவாக கடல்நீர்மட்டம் உயருவதால் சிறு தீவுகள் மூழ்கக்கூடும்; கடையோர நகரங்கள் அழியக்கூடும்; விளைநிலங்கள் பாழாகக்கூடும் என்பன உள்ளிட்ட ஆபத்துகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. தொழில்கள், உட்கட்டமைப்புகள், வாழ்வாதாரங்கள் ஆகியவையும் பின்னடைவை சந்திக்கக் கூடும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். அவற்றுக்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.
காலநிலை மாற்றத்தின் தீமைகளில் இருந்து உலகைக் காப்பதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக, காலநிலைமாற்ற அவசர நிலையை பிரகரனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்திருக்கிறது. இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், லண்டன், பாரிஸ், நியூயார்க், சிட்னி உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் கடந்த ஓராண்டில் காலநிலைமாற்ற அவசர நிலை பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளன.உலகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தனியார் நிறுவனங்கள் ஆகியவையும் இத்தகைய பிரகடனத்தை வெளியிட்டு, காலநிலை மாற்றத்தின் தீமைகளை தடுக்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.
தமிழ்நாட்டிலும் மாநில சட்டப்பேரவை தொடங்கி உள்ளாட்சி அமைப்புகள் வரை இத்தகைய பிரகடனம் வெளியிடப்பட வேண்டும்; அவற்றின் அடிப்படையில் கரியமில வாயுக்கள் வெளியேறுவதை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மட்டுமின்றி வணிக நிறுவனங்கள், தனிநபர்கள் வரை இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர, அவசிய பணியாகும். இது குறித்து தமிழக அரசு, உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பரப்புரை இயக்கம் பசுமைத் தாயகம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. சென்னை வள்ளுனர் கோட்டம் அருகில் நாளை மறுநாள் (20.08.2019) செவ்வாய்க் கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பா.ம.க. மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலநிலை மாற்ற அவசரநிலை பிரகடனத்தை வெளியிட வலியுறுத்தும் பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைத்து, காலநிலை மாற்றம் பற்றி சிறப்புரையாற்றுகிறார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.
உலகைக் காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய உன்னத கடமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த பரப்புரையில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த முயற்சிக்கு ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.