Published on 09/07/2019 | Edited on 09/07/2019
நேற்று (08.07.2019) பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய இயக்கங்களும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் கலந்துகொண்டன. இந்த கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இவ்வாறு கூறினார்.
மனிதர்களிடையே நிலவிய ஏற்ற தாழ்வை சரி செய்வதற்கும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகத்தினருக்கு நீதி கிடைப்பதற்கும் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இட ஒதுக்கீடு.
எந்த நோக்கத்திற்காக இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வரையில், அது நீடித்திட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு எந்த பழுதும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.
பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே ஒருமுறை தமிழ்நாட்டில் முயற்சி செய்யப்பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்பினால் திரும்பப் பெறப்பட்டது.
அந்த வகையில், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இட ஒதுக்கீட்டின் உண்மையான நோக்கத்தை சிதைப்பதாகவும் இருக்கும் என மக்கள் நீதி மய்யம் உறுதியாக நம்புகிறது.
எனவே மத்திய அரசின் இந்த திட்டத்தினை தமிழக அரசு நம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கின்றது.