முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, பேரறிவாளனை விடுவித்து நேற்று தீர்ப்பளித்தது. மேலும், ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்கத் தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி தாங்களே விடுதலை செய்வதாக அறிவித்தது.
பேரறிவாளன் விடுதலையைப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று வரும் நிலையில், இதனை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சூழலில், இவ்விவகாரம் பற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூ, "பேரறிவாளன் விடுதலையான பிறகு முதலமைச்சர் அவரை கட்டி அணைக்கிறார். ஆனால் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதலமைச்சரின் செயலை உங்களால் கண்டிக்க முடியுமா...? முதுகெலும்பற்றவர்களின் துணிச்சலற்ற செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.