
மோடி பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக 14 ஆண்டு காலணி அணியாமல் இருந்தவருக்கு பிரதமர் மோடி காலணி அணிவித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹரியானா மாநிலம் கைத்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பால் காஷ்யாப். பிரதமர் மோடியின் தீவிர தொண்டரான இவர், 14 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பிரதமராகும் வரை காலணி அணிய மாட்டேன் என்ற சபதத்தை எடுத்துள்ளார். அதன்படி, அவர் காலணி அணியாமல் இருந்துள்ளார். மோடி பிரதமரான பின்பும், அவர் காலணி அணியாமல் வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி ஹரியானா மாநிலத்திற்கு நேற்று சென்றார். அங்கு சென்ற அவர், யமுனா நகரில் உள்ள தீன்பந்து சோட்டு ராம் அனல் மின் நிலையத்தில் 800 மெகாவாட் அனல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த பயணத்தின் போது, காலணி அணியாமல் சபதம் எடுத்து வாழ்ந்து வந்த ராம்பால் காஷ்யாப்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதன் பின்னர், ரம்பால் காஷ்யப்பின் சபதத்தை முடித்து வைக்கும் விதமாக அவருக்கு காலணி அணிவித்தார்.
இது தொடர்பாக வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது, ‘யமுனாநகரில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கைத்தலைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப்பைச் சந்தித்தேன். நான் பிரதமரான பிறகுதான் காலணிகளை அணிவேன் என்று அவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு சபதம் எடுத்திருந்தார், அவருக்கு என்னைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இன்று அவருக்கு காலணிகள் அணிய வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ராம்பால் போன்றவர்களால் நான் பணிவுடன் இருக்கிறேன், அவர்களின் பாசத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற சபதங்களை எடுக்கும் அனைவரையும் நான் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து சமூகப் பணி மற்றும் தேசக் கட்டுமானத்துடன் தொடர்புடைய ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்’ எனத் தெரிவித்தார்.