நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 17 ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அதாவது, மே 17 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என ஜோன்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சிவப்பு மண்டலமாக உள்ள பகுதிகளில் இந்த ஊரடங்கில் எந்தத் தளர்வும் இருக்காது. மற்ற பகுதிகளில் தளர்வு இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமுடக்கம் மே 17 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் பல்வேறு விதிமுறைகளையும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்கலாம். சமூக, அரசியல், பண்பாட்டு ரீதியிலான விழாக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும். மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை தொடர்ந்து நீடிக்கும். நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "அந்த நாள் முதல் இந்த நாள் வரை, ஸ்டாண்டிங்ல விழி பிதுங்கற பஸ்ஸையும், ஒருத்தர் மேல ஒருத்தர் உட்காந்துட்டு போகுற ஷேர் ஆட்டோவையும் மட்டுமே அனுபவிச்ச நமக்கெல்லாம் (ஆமாம், நானும் தான்) காலி பஸ்ஸுல போறதெலாம், கனவு பலித்தது மாதிரி! எல்லாம் கரோனா மகிமை என்று கூறியுள்ளார்.
மேலும் உள்ளூர் பேருந்துகள் அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத அளவிற்குப் பயன்படுத்தபடும் என்று கூறியுள்ளார்கள். 50 சதவீதம் பயன்படுத்தப்படும் என்றால் என்ன? பஸ்ஸில் இருக்கை வரம்பில் பாதியா அல்லது 'வழக்கமான' உச்சக் கூட்டத்தின் பாதியா? அது தான் என்னுடைய கேள்வி என்றும், விதிகள் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்" என்றும் கூறியுள்ளார்.