தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 6ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அதேவேளையில் வேட்பாளர்கள், அவர்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை விமர்சித்தும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்தும் பிரச்சாரம் செய்து நடத்திவருகின்றனர்.
அந்த வகையில், சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, நேற்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “வழக்கு நிலுவையில் உள்ளது என திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தார். அது, எது தொடர்பான வழக்கு எனக் கேள்வி கேட்டிருந்தேன். பொதுத் தளத்தில் விவாதிக்கலாம் எனப் பதிலளித்தார். ஆனால் எங்கே என இதுவரை பதிலளிக்கவில்லை.
கிண்டி லேபர் காலணியில் மா.சுப்ரமணியன் வீடுகளை அபகரித்துள்ளார். தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வீட்டை மா.சுப்பிரமணியன், தனது மனைவியின் வீடு எனக் கடந்த தேர்தலின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மேயர் பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து வீட்டை அபகரித்துள்ளார். தேர்தல் களம் வேண்டாம் என ஒதுங்கி இருந்தேன். ஆனால் மக்களும் கட்சியும் போட்டியிட விரும்பியதால் போட்டியிடுகிறேன்.
கள்ள வாக்குகளுக்காகப் போலி ஆவணங்கள் தயாரிக்கும் பணிகளை திமுக அண்ணா அறிவாலயத்திலேயே செய்கிறது. 2006 உள்ளாட்சித் தேர்தலில் திமுகவில் சேரச் சொல்லி எனக்கு அழைப்பு வந்தது. நான் மறுத்துவிட்டேன். நீங்கள் வரவில்லை என்றால் மக்களால் தேர்வு செய்யும் முறையை மாற்றுவோம் என்று மிரட்டினார்கள். அதன்பிறகுதான் முறை மாற்றப்பட்டது. சைதை தொகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளதாக மா.சுப்ரமணியன் சொல்கிறார். இருக்கும் 998 தெருக்களில் எப்படி 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடியும்” என சைதை துரைசாமி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இதற்கு விளக்கம் அளித்துள்ள திமுக சைதாப்பேட்டை வேட்பாளர் மா.சுப்பிரமணியம், “நேற்று சைதை துரைசாமி, நான் தொழிலாளர்களுக்குக் கொடுத்த வீட்டை அபகரித்துவிட்டேன்; அது என் மனைவியின் பெயரில் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். கிண்டி லோபர் காலணியில் அமைந்துள்ள அந்த வீட்டின் அளவு 1,100 சதுரடி. இதனை 1995ஆம் ஆண்டு என் நண்பர் ஜம்புலிங்கம், நான் வாடகை வீட்டில் வசித்துவருவதைப் பார்த்து, எனக்கு அவரது செலவில் ரூ.2,30,000 கொடுத்து அந்த வீட்டை வாங்கிக் கொடுத்தார். அந்த வீட்டை என்றால், அந்த வீட்டின் மேல் கூரையை மட்டுமே, நிலத்தை அல்ல. இதனைத்தான், நான் ஒவ்வொரு முறை தேர்தல் போட்டியிடும் போதும் தேர்தல் ஆணையத்திடம், கிண்டி லேபர் காலணியில் 1,100 சதுரடியில் வீடு மேற்கூரை மட்டும் எனக்குச் சொந்தம், நிலம் கிண்டி சிட்கோவுக்கு சொந்தம் எனத் தெரிவித்துள்ளேன்.
இந்தச் சொத்து விவரமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கு நான், என்னைக் கைது செய்யக்கூடாது எனவும் தடை வாங்கியிருக்கிறேன். இருந்தும் என்னைக் கைது செய்யப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். உச்சபட்சமாக, உச்சநீதிமன்றம் சென்று இந்த சென்னை உயர்நீதிமன்றத் தடைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தனர். அதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனிடையே அவரது வழக்கறிஞரிடமிருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதில் ஒரு தனியார் தொலைகாட்சியில் விவாதத்திற்கு அழைத்தார். அதற்கு நான், தனியொரு தனியார் தொலைகாட்சி வேண்டாம், மொத்த பத்திரிகையாளர்களையும் அழைத்து விவாதம் நடத்துவோம் என்றேன். அதற்குப் பதில் இல்லை. என் மனைவி பெயர் காஞ்சனா, அவரது தந்தை பெயர் சாரங்கபாணி. ஆனால், சைதை துரைசாமி, கண்ணனின் வாரிசு என்று பொய்யாகச் சான்றிதழ் அளித்து வாங்கினேன் என்கிறார். 2003 வரையிலான ரேஷன் கார்டு இது, அதன் பிறகு தற்போது இருக்கும் ரேஷன் கார்டு இது. இதில், எங்கையாவது என் மனைவியின் தந்தை பெயர் கண்ணன் என இருந்தால் நிரூபிக்கட்டும். இது மட்டுமின்றி சிவில் சப்ளைஸ் எந்த ஆவணத்திலாவது கண்ணன் எனும் பெயரை காண்பிக்கட்டும். நான், இன்றே அரசியலை விட்டு விலகத் தயார்” எனச் சவால் விட்டுள்ளார்.