
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த கடந்தாண்டு ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராமர் கோயிலை பயங்கரவாத கும்பல் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைப்புகளுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. அதன்படி, மத்திய அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தானி உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்ததாகவும், ராமர் கோயிலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் (19) என்ற சந்தேக நபரை பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.
கைது நடவடிக்கையின் போது, அந்த நபரிடம் இருந்து இரண்டு வெடிக்குண்டுகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அப்துல் ரஹ்மான் பல பயங்கரவாத குழுக்களின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் அறிவுறுத்தல்களின்படி, இந்த சதித் திட்டத்தில் அவர் தீவரமாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ராமர் கோயிலை பலமுறை பார்வையிட்டு ஐஎஸ்ஐ அமைப்பினரிடம் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத்தில் இருந்து ஃபரிதாபாத்திற்கு ரயிலில் வந்த அப்துல் ரஹ்மான், அங்கு ஒரு நபரிடம் இருந்து வெடி குண்டுகளை வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தி ராமர் கோயிலை திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துவதற்காக, அந்த வெடி குண்டுகளை அயோத்திக்கு எடுத்துச் செல்வதே அப்துல் ரஹ்மானின் பணியாக இருந்துள்ளது. இந்த நிலையில், தான் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்துள்ளனர்.