Skip to main content

விஜய்யை தேர்வு செய்தது ஏன்? - தவெகவில் சேர்ந்த பெண் ஏடிஎஸ்பி அனுசுயா டெய்ஸி விளக்கம்!

Published on 05/03/2025 | Edited on 05/03/2025

 

TVK party member, EX Police officer interview

காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றி, பிறகு அரசியலில் களத்தில் இறங்கி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு, தற்போது தவெகவில் இணைந்திருக்கும் முன்னாள் ஏடிஎஸ்பி அனுசுயா டெய்ஸியை நக்கீரன் டிவி சார்பாக நேர்காணல் செய்தோம். நமது பல்வேறு கேள்விகளுக்கு தன்னுடைய பதிலையும் கருத்துக்களையும் நம்மிடையே தெரிவித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா கட்சிகளுமே வாரிசு அரசியலையே முன்னெடுக்கிறது. ஊழல் செய்து கொண்டிருக்கிறது. கட்சி நிர்வாகிகளுக்கு கட்சிக்குள் மரியாதை கிடையாது. மக்கள் மீது அக்கறை கிடையாது. ஆனால் விஜய் அப்படியெல்லாம் இல்லை. தன்னுடைய நடிப்பால், உழைப்பால் நம்பர் ஒன் இடத்திற்கு வந்து அந்த இடத்த விட்டு விட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்திருக்கிறார். 

மன்னராட்சி இல்லை, இது மக்களாட்சி,. அப்பாவிற்கு பிறகு மகன் வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. தன்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்கு வர மாட்டார்கள் என்றார் முதல்வர். ஆனால், தன்னுடைய மகனை எம்.எல்.ஏ-வாக ஆக்கி, பிறகு அமைச்சராக்கி, தற்போது துணை முதல்வாக்கி விட்டார். இது மக்கள் தந்த பொறுப்பில்லை. துணை முதல்வருக்காக தேர்தலில் நின்று வரவில்லை. முதல்வர் மகன் என்பதால் இந்த பொறுப்பிற்கு வந்து விட்டார். அப்பா பிறகு மகன் பேரன் என்று தொடர்ச்சியாக மன்னராட்சி போல வந்து கொண்டிருக்கிறார்கள். 

கட்சியில் எத்தனையோ மூத்தவர்கள் இருந்த போதும் இளையவரான இவரை அந்த பதவியில் ஏன் உட்கார வைக்க வேண்டும். அதிமுகவில் ஜெயலலிதா ஓபிஎஸ்-ஸை முதல்வராக உட்கார வைத்தார். சசிகலா இபிஎஸ்-ஸை உட்கார வைத்தார். யாரும் அவர்களது வாரிசுகளை கொண்டு வரவில்லையே? மற்ற கட்சிகளில் வாரிசுகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லையே? அதிகாரப் பொறுப்பிற்கு வந்து இருப்பவர்களைத் தானே விமர்சிக்க முடியும்.

விஜய் 200 கோடி சம்பளத்தை விட்டு விட்டு, எனக்கு இதை கொடுத்த மக்களுக்கு நான் எதாவது செய்தாக வேண்டும் என்று கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்திருக்கிறார். வேலை வாய்ப்பற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடுவேன். வீடு இல்லாதவர்களுக்கு வீடு அளிப்பேன் என்று ஒருவர் அரசியல் களத்திற்கு வருகிறார்.

மக்கள் 50 வருட ஆட்சியில் ஊழல் செய்கிற கட்சியையே பார்த்திருக்கிறார்கள். ஒரு 05 வருடம் அரசியலுக்கு புதியவரான விஜய்க்கு வாய்ப்பு கொடுத்துத் தான் பார்க்கட்டுமே. அவர் தவறு செய்தால் அவரையும் தூக்கிப் போடப் போகிறார்கள். 

விஜய் கட்சியில் இப்போது தான் பொறுப்பு போட்டு வருகிறார்கள். ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் அரசியல் பொறுப்பில் இருந்தவர்களுக்கு தவெக-வில் இணைந்த பிறகு பொறுப்பு கொடுத்து வருகிறார்கள். அடுத்தடுத்து புதியவர்களுக்கு வாய்ப்பும் பொறுப்பும் கொடுக்கப்படும். தன்னுடைய கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்று வெளிப்படையாக சொல்லி அரசியலுக்கு வந்திருக்கிறார். எனவே தான் தமிழக வெற்றிக்கழகத்தில் விஜய் தலைமையை ஏற்று நான் அந்த கட்சியில் இணைந்துள்ளேன்.  

நேர்காணல் வீடியோவை முழுமையாக காண கீழே லிங்க் இணைக்கப்பட்டுள்ளது...