
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் உயர்நீதிமன்றம் 12 வாரத்தில் வழக்கை முடிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் சீமான் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
சம்மனில் குறிப்பிட்டிருந்தபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும் அவர் கட்சிப் பணிக்காகச் சென்றிருப்பதாகக் கூறி அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் காரணமாக நாளை (28.02.2025) காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டினர். அதில், ‘விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது.
இந்த சம்மனை கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளர் சீமான் வீட்டுக் காவலாளி உள்ளே விடாமல் தடுத்துள்ளார். இந்நிலையில் சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போலீசாரை தாக்கியதாக வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டார். காவலாளி அமல்ராஜ் வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்து இழுத்துச் சென்றனர். அவர் முன்னாள் எல்லைப் பாதுகாப்பு வீரர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் எக்ஸ் சர்வீஸ் மேன் பெடரேஷன் மாநிலத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ''ராணுவ வீரர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தெரியாதா? ஒரு ராணுவ வீரரை போலீசார் தாக்குகிறார்கள். தமிழக முதல்வர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இதுதான் மரியாதையா? காவல்துறையை முன்னாள் ராணுவ வீரர்கள் நண்பர்களாக தான் பார்க்கிறோம். காவல்துறையின் சூழ்நிலையோ என்னவோ தெரியவில்லை அவர்களுக்கு வருகின்ற அழுத்தமா என்னவென்று தெரியவில்லை கட்சிக்காரர்கள் மீது என்ன கோபம் இருந்தாலும் சரி அவர்கள் மீது காட்ட வேண்டிய கோபத்தை ஒரு ராணுவ வீரர் மீது காட்டியுள்ளார்கள்.
இந்த அராஜக போக்கை முற்றிலும் கண்டித்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முன்னாள் ராணுவ வீரர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து நான் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வேன் என்பதை இதன் மூலம் தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். சம்மன் கொடுக்க வந்திருக்கிறார்கள். சம்மனை இஷ்யூ பண்ணுங்கள் என்று தான் சட்டம் சொல்கிறது. சம்மனை சுவற்றில் ஒட்டி உள்ளார்கள், பார்க்க வேண்டியவர்களுக்கு அந்த விஷயம் போய் சேர்ந்து விட்டது, அதன் பிறகு அதை கிழிக்கிறார்கள் கிழிக்காமல் போகிறார்கள், அதில் காவல் துறைக்கு என்ன வந்தது?
முன்னாள் ராணுவ வீரரை தராதரவென அடித்து இழுத்துச் சென்று துப்பாக்கி வைத்திருக்கிறார் துப்பாக்கி வைத்திருக்கிறார் என சொல்கிறார்கள். தீவிரவாதிகளை பிடிக்க வேண்டியதுதானே? கஞ்சா விற்பவர்களை, கஞ்சா குடிப்பவர்களை இப்படி பிடிப்பதில்லை. கொலை, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை பிடிப்பதில்லை. ஆனால் ஒரு ராணுவ வீரர் அனுமதியோடு லைசென்ஸ் உடன் துப்பாக்கி வைத்திருக்கிறார். அந்த துப்பாக்கியை எடுத்து கொடுக்க தான் அவர் முயற்சி செய்தார். ஆனால் குற்றவாளியை பிடிப்பது போல அடித்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். கண்ணில் கை வைத்து குத்தியுள்ளார் அந்த காவல் ஆய்வாளர்.
அந்த காவல் ஆய்வாளரை பார்க்கும் பொழுது எனக்கே பயமாக இருக்கிறது. அவர் உண்மையில் காவல் ஆய்வாளர் தானா அல்லது போலியாக சீருடை அணிந்து வந்திருக்கிறாரா என என சந்தேகம் வருகிறது .தலைமை டிஜிபியிடம் கண்டிப்பாக புகார் அளிப்பேன். சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடு, மாடு என எந்த விலங்குகளாக இருந்தாலும் சரி தாக்கினால் தடுக்க தான் செய்யும். அவர் தாக்கவில்லை தடுக்க தான் செய்தார். கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே ஒரு இன்ஸ்பெக்டர் போனதை வீடியோவில் பார்த்திருப்பீர்கள். அவர் சட்டையை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்து வருகிறார். ஒரு ராணுவ வீரரை சாதாரண மக்களே அடிக்க கூடாது. ஆனால் ஒரு அதிகாரி எப்படி இப்படி அடிக்கலாம். எந்த தைரியத்தில் இதை செய்திருக்கிறார். சீமானுடைய கட்சி மேல் அரசுக்கு வன்மம் இருக்கிறது அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த தைரியத்தில் காவல்துறை இந்த வேலையை செய்திருக்கிறது. சாதியைச் சொல்லி காவல் ஆய்வாளர், முன்னாள் ராணுவ வீரரை திட்டி இருக்கிறார். ஒரு காவல் ஆய்வாளர் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். காவல்துறை இப்படி செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம். அதிகபட்சமாக தவறு செய்வது இன்ஸ்பெக்டர்கள் தான். ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்த அதிகாரிகள் சரியாக இருக்கிறார்கள், இன்ஸ்பெக்டர் லெவலில் இருப்பவர்கள் தான் இப்படி செய்கிறார்கள்'' என்றார்.