Skip to main content

தமிழகத்தில் மேலும் 17 மரகத பூஞ்சோலைகள் - தமிழக அரசு தகவல்!

Published on 06/03/2025 | Edited on 06/03/2025

 

TN govt information 17 more emerald gardens in Tamil Nadu 

தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் எனப்படும் மரகத பூஞ்சோலைகள்  உருவாக்கப்படவுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வனத்துறை அமைச்சரால் 100 மரகதப்பூஞ்சோலைகள் (கிராம மரப்பூங்காக்கள்) உருவாக்குதல் என்ற திட்டம் 2022 - 23ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம், உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களைச் சார்ந்து இருப்பதை குறைத்தல் ஆகும். உள்ளூர் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் மாநிலத்தின் பசுமைப் பரப்பை மேம்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான மாற்று வருவாய் ஏற்படுத்துதல் ஆகும்.

அதன்படி அரசாணை நிலை எண் 146, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நாள். 24.08.2022 தேதியில் ரூ.25 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வெளியிடப்பட்டது. இந்த மரகதப்பூங்காக்கள் உள்ளூர் மக்களுக்குத் தேவையான இயற்கை வளங்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன் அதன் மூலம் காடுகளின் மீதான உயிரின தாக்கத்தினை குறைக்கிறது. மரகதப்பூஞ்சோலைகள் மாநில அரசின் தனித்துவமான முன்னெடுப்பாக திகழ்வதுடன் கிராம மக்களுக்கு ஒரு பொழுது போக்கு இடமாகவும். கிராமங்களுக்கு எதிர்வரும் காலங்களில் தண்ணீர் மற்றும் காலநிலை பாதுகாப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசினால் ஏற்கனவே 83 மரகதப்பூஞ்சோலைகள் அமைக்க இரண்டு கட்டமாக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 75 மரகதப்பூஞ்சோலைகள் 29 மாவட்டங்களில் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று 14.08.2024 தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் 8 மரகதப்பூஞ்சோலைகளிலும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஒவ்வொரு மரகதப்பூஞ்சோலையும். 1 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கம் செய்யப்பட்டு அதில் பாதுகாப்பு வேலி, அலங்கார வளைவுடன் கூடிய நுழைவாயில் கதவு, நிரந்தர பார்வையாளர் கூடாரம், நடைபாதை, ஆழ்துளை கிணறு, சாய்வு மேசைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தடிமரம், எரிபொருள். தீவனம், காய் அல்லதுகனி ஆகியவைகளை தரும் நாட்டு இன மரங்களாகிய நாவல், நெல்லி, நீர்மருது, பாதாம், புளி, வில்வம், கொய்யா, செஞ்சந்தனம், பலா, மகிழம், புன்னை, மா, வேம்பு ஆகியவை அனைத்து மரகதப்பூஞ்சோலைகளிலும் நடவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது, மேலும் 17 மரகதப்பூஞ்சோலைகள் 5 மாவட்டங்களில் மொத்தம் ரூ.425 இலட்சம் செலவில் மேற்கொள்ள மாநில அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மரகதப்பூஞ்சோலைகள் திண்டுக்கல் (5), பெரம்பலூர் (4) கள்ளக்குறிச்சி (3). திருப்பத்தூர் (3) மற்றும் திருவண்ணாமலை (2) ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்படுவதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 100 மரகதப்பூஞ்சோலைகள் கிடைக்கப்பெறும்” எனத் தெருவிக்க்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்