
பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத் நிஜாபேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படாமலே இருந்ததால் சந்தேகமடைந்த குடியிருப்பு வாசிகள் கதவை தட்டியுள்ளனர். உள்ளே இருந்து யாரும் கதவைத் திறக்காததால் கல்பனா உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து உறவினர்கள் தொலைப்பேசி மூலம் கல்பனாவைத் தொடர்பு கொண்ட போதும் கல்பனாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் மயங்கிய படி கல்பனா கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் கல்பனாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கல்பனா தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கல்பனா சுயநினைவுக்குத் திரும்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கல்பனாவின் மகள் தனது தாய் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “எனது தாய் வழக்கமாக வரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மேலும் மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரையைச் சாப்பிட்டுள்ளார். ஆனால் அம்மாத்திரையின் வீரியம் அதிகமானதால் இது போன்று நடந்துள்ளது. மற்றபடி அவர் தற்கொலைக்கு முயற்சிக்க வில்லை. அப்படி யாரும் இதை திசை திருப்ப வேண்டாம். அவர் நல்ல படியாக இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வீடு திரும்பவுள்ளார்” என்றார்.