சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 09.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கான உறுதிமொழியும் ரகசியக்காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்ட பின் அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி. இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்ற போதும் விமர்சனங்கள் வந்தது. கண்டிப்பாக விமர்சனங்கள் வரும். அதையெல்லாம் மீறி என் செயல் மூலமாக மட்டுமே விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல முடியும்.
இளைஞரணி செயலாளராகும் போதும் சட்டமன்ற உறுப்பினராகும் போதும் இந்த விமர்சனங்கள் வந்தது. என்னால் முடிந்த அளவு அனைவரின் ஒத்துழைப்போடும் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை சரிவர செய்ய முயற்சிக்கிறேன். அலுவலகத்திற்குச் சென்று முதல் கையெழுத்து போட்டதும் என் திட்டங்கள் என்னென்ன என்று சொல்கிறேன்.
தமிழகத்தை விளையாட்டுகளின் தலைமை இடமாக மாற்ற வேண்டும் என்ற யோசனை உள்ளது. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ளோம். அதற்கான பணிகளைத் துவங்கி அதை முடுக்கி விடுவதற்கான வேலைகளை ஆரம்பிப்போம்.
அமைச்சர் என்பது கூடுதல் பொறுப்பு அவ்வளவு தான். என் மீது விமர்சனங்கள் வைப்பார்கள். வாரிசு அரசியல் எனச் சொல்வார்கள். அதைத் தடுக்க முடியாது. என் செயல் மூலமாக மட்டுமே அதைச் சரி செய்ய முடியும். என் மீதுள்ள குறைகளைச் சொல்லுங்கள். விமர்சனம் செய்யுங்கள். அதற்குத் தகுந்தவாறு பணிகளைக் கண்டிப்பாக அமைத்துக்கொள்வேன்” எனக் கூறினார்.