Skip to main content

இ.பி.எஸ். கொடுத்த கிரீன் சிக்னல்; முதல்வர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி!

Published on 01/03/2025 | Edited on 01/03/2025

 

EPS has given the green signal CM MK Stalin is happy

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 25ஆம் தேதி (25.02.2025) 19வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டப்பட உள்ளது என முடிவெடுக்கப்பட்டது. 2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளது.

இதனால் தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி  நேற்று (28.12.2025) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 2 பேர் கலந்து கொள்வார்கள். அந்த 2 பேரும் அதிமுகவின் நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துச் சொல்வார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினின்  72ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பிரதமரே, எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுங்கள். ‘இப்போது இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாது.1971 மக்கள்தொகை அடிப்படையில், தமிழ்நாட்டுக்குரிய பிரிதிநிதித்துவம் கிடைக்கும். தமிழ்நாட்டுக்குப் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்று உறுதி கொடுங்கள். இன்றைக்குத் தமிழ்நாடு எழுப்பியிருக்கும் இந்த உரிமைக்குரலை, தெலங்கானா, கர்நாடகாவில் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி. மற்ற மாநிலங்களும் நியாயத்துக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைக்கு நாம் விழிப்புடன் இருந்து, நம்முடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் இனி ஒருபோதும் தமிழர்களின் கையில் அதிகாரம் வராது! தமிழர்களின் சொல்லுக்கு மரியாதையே இருக்காது. அதனால்தான், காலையில் நான் வெளியிட்ட வீடியோவில், உடன்பிறப்புகள் எல்லாம், இந்தச் செய்தியை அனைவருக்கும் எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.  இங்கே கூட்டணிக் கட்சியினர் அனைவரும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் இது சம்பந்தமாகத் தொடர்ந்து கூட்டம் போட்டுப் பேசி, இது பற்றிய விழிப்புணர்வைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். அதில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. கலந்து கொள்ளும் என்ற செய்தி வந்திருக்கிறது. மகிழ்ச்சி.

EPS has given the green signal CM MK Stalin is happy

சிலர், கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம், இன்றைக்கு பா.ஜ.க.வை மகிழ்விக்க நீங்கள் செய்யும் சுயநல அரசியலால் தமிழ்நாட்டுக்குத் தீங்குதான் ஏற்படும். பா.ஜ.க.வை நம்பி சென்றவர்கள், அவர்களின் தேவை தீர்ந்தவுடனே மற்ற மாநிலங்களில் என்ன ஆனார்கள் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க.வினருக்கும் சேர்த்து நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டுக்குத் துணையாக நில்லுங்கள்.

தயவு செய்து உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதீர்கள். நாம் அனைவரும் ஓரணியில் இருக்கிறோம் என்று மற்ற மாநிலங்களுக்குக் காட்ட வேண்டும்! அதுமூலமாகத்தான் வர இருக்கும் ஆபத்த தடுத்து, நம்முடைய உரிமையை வென்றெடுக்க முடியும்! வென்றெடுத்தால்தான், எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்! நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாம் இதைச் செய்தே ஆக வேண்டும்! இதில் தவறிவிட்டோம் என்றால், நமக்கான அடையாளமே இல்லாமல் போய்விடும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்