
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (05.03.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, தங்கம் தென்னரசு, அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது “நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது” என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து நம் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை அமல்படுத்த ஒன்றிய அரசுத் துடிக்கிறது. இந்த சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் நின்று வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்தக் கூட்டத்தில், அடுத்து வரும் 30 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் - தொகுதி மறுவரையறை செய்வதால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் தீங்கினை மக்களிடம் எடுத்துச்சொல்வது உட்பட 5 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும் ஓரணியில் நின்று பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம். தமிழ்நாடு போராடும்!, தமிழ்நாடு வெல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.