Skip to main content

“ஆதிக்க மொழியுணர்வு கொண்டு பா.ஜ.க. அரசு செயல்படுகிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 05/03/2025 | Edited on 05/03/2025

 

CM MK Stalin says BJP govt is operating with a dominant language consciousness

ஆதிக்க மொழியுணர்வு கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின் தொண்டர்களுக்கு ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள 8வது கடிதத்தில், “இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிதான் இந்தி, அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக இருக்கிறது. இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது. 1965ஆம் ஆண்டு மாநிலங்களவையில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா, ‘இந்தி ஒரு பகுதியில் உள்ள மக்களால் பேசப்படுகிறதேயன்றி, இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்படவில்லை. ஒரு பகுதியில் பெரும்பான்மையினரால் பேசப்படுவது, நாடு முழுவதும் ஆட்சி மொழியாவதற்கான தகுதியைப் பெற்றுவிடாது.

மொழிப் பிரச்சினையில் தி.மு.க.வின் கொள்கை என்னவென்றால், இந்தியாவில் முக்கிய மொழிகளாக உள்ள 14 மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆட்சிமொழிகளாகும் தகுதி தரப்படவேண்டும்’ என்று வாதாடினார். ‘தி.மு.க.வின் நோக்கம் இந்தியை எதிர்ப்பதல்ல, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்குச் சமமான அங்கீகாரம் வேண்டும். இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளாக -அலுவல் மொழிகளாக அனைத்து மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார். தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், மாநில மொழிகளின் வளர்ச்சிக்காகத்தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் சொல்கின்ற பா.ஜ.க. ஆட்சியில், சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2 ஆயிரத்து 435 கோடி.

இதே காலகட்டத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது ரூ.167 கோடி மட்டுமே. ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசுபவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்த முயற்சிக்கிறது. தமிழைப் போலவே இந்தியாவின் பிற மாநில மொழிகளையும் ஆதிக்க மொழிகளைக் கொண்டு அழிக்கத் துடிக்கிறது. மொழித் திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பதை உலகச் சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்