
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, அங்கு முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக் கட்டிடங்களுக்கும் காவி நிற சாயம் பூச மாநில பா.ஜ.க அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒடிசா மாநில கல்வித் திட்ட ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘புதிய வண்ணக் குறியீட்டை அங்கீகரிப்பதில் அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது. இந்தச் சூழலில், பிம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் உட்பட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கட்டுமானம், பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளின் போது அங்கீகரிக்கப்பட்ட ஆரஞ்ச் வண்ணக் குறியீட்டை ஏற்றுக்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட களப்பணியாளர்களுக்கு பொருத்தமான வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க அரசின் இந்த முடிவை பிஜூ ஜனதா தளம் கடுமையாக எதிர்த்துள்ளது. இது குறித்த பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பிரசன்னா ஆச்சார்யா கூறியதாவது, “இது ஒரு விசித்திரமான உளவியல். இந்த அரசாங்கம் ஏன் இத்தகைய போலி முடிவுகளை எடுக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. இதன் நோக்கம் என்ன? வண்ணங்களை மாற்றுவதன் மூலம் கல்வி முறையை மாற்ற முடியுமா? வண்ணங்களை மாற்றுவதன் மூலம் குழந்தைகளிடையே அதிக ஆற்றலை ஊட்ட முடியுமா? பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுமிகளின் மனதில் அரசியலை திணிக்க பா.ஜ.க அரசு முயற்சிக்கிறது. இதனால், மாநிலத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும். இத்தகைய முடிவால் எந்த விஷயத்தையும் சாதிக்க முடியாது” என்று கூறினார்.
முன்னதாக, ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பிஜூ ஜனதா தளம் அரசின் கீழ், அனைத்து அரசுப் பள்ளிகளும், அலுவலகக் கட்டிடங்களும் அக்கட்சியின் நிறமான பச்சை நிறத்தில் வரையப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.