
ஆர்.ஜே பாலாஜி - என்.ஜே சரவணன் இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் மீண்டும் நயன்தாராவே அம்மனாக நடிக்கிறார். ஆனால் இப்படத்தைச் சுந்தர்.சி இயக்குகிறார். வேல்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இந்த முறை பிரம்மாண்டமாக பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் பிரம்மாண்டமாக நடந்தது. இதற்காக ரஜினி மற்றும் கமலிடம் சமீபத்தில் ஐசரி கணேஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பூஜை நிகழ்ச்சியில் இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை சுந்தர் சி அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, கன்னட நடிகர் துனியா விஜய், யோகி பாபு, கருடா ராம், சிங்கம் புலி, அபினயா, அஜய் கோஷ், மைனா நந்தினி, சுவாமிநாதன் ஆகியோர் நடிப்பதாகத் தெரிவித்தார். மேலும் ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயன்தாரா, மீனா, குஷ்பு, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சியில் ஐசரி கணேஷ் பேசுகையில், “ஐந்து வருடங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மன் என்ற தலைப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என என்னிடம் கதை சொன்னார். எங்களின் குல தெய்வம் சாமி மூக்குத்தி அம்மன் என்பதால் படத்தின் தலைப்பைக் கேட்டவுடனே எனக்கு பிடித்து போய் ஓ.கே. சொல்லிவிட்டேன். அப்போது அம்மனாக யாரை நடிக்க வைக்கலாம் எனக் கேட்ட போது அவர் சொன்ன பெயர் நயன்தாரா. உடனே அவரை அணுகினோம். அவரும் நடிப்பதாக ஒப்புக்கொண்டு மூக்குத்தி அம்மனாகவே வாழ்ந்தார். அந்த படத்தின் இரண்டாம் பாகம் பண்ணலாம் என முடிவெடுத்து சுந்தர் சியை அணுகினோம். ஒரு மாதம் கழித்து கதை ரெடி பண்ணி வந்தார். மேலும் பெரிய பட்ஜெட்டில் பண்ண வேண்டும் என கேட்டார். அவர் மீது நம்பிக்கை இருப்பதால் இந்தப் படத்தை பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக்க ஒப்புக்கொண்டேன். பட வெளியீட்டை உலக அளவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
இந்தப் படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து வருகிறார். முதல் பாகத்திலும் விரதம் இருந்து அம்மனாக நடித்துக் கொடுத்தார். அதே போல் இந்தப் பாகத்திற்காகவும் ஒரு வாரமாக விரதம் இருந்து வருகிறார். அவரோடு அவரது குழந்தைகள், குடும்பம் என அனைவரும் விரதத்தில் இருக்கின்றனர். நயன்தாரா இந்தப் படத்திலும் அம்மனாகவே வாழப்போகிறார்” என்றார்.