Skip to main content

புதுச்சேரி ஏ.எப்.டி - ரோடியர் பஞ்சாலையை மூடுவதை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! 

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

 

புதுச்சேரியின் நூறாண்டு கால ஏ.எப்.டி - ரோடியர் பஞ்சாலையை நிரந்தரமாக  மூடுவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு புதுச்சேரியின் தி.மு.க உள்ளிட்ட  அரசியல் கட்சிகள், சமூக ஜனநாயக இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

 

இந்தியா மற்றும் புதுச்சேரி விடுதலைப் போராட்டத்திலும், ஆசியக் கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரிமையை வென்றெடுத்த ரோடியர் பஞ்சாலையைப் புதுச்சேரி அரசு நிரந்தரமாக மூடியுள்ளது. இச்செயல் மண்ணின் அடையாளத்தை புதைகுழியில் தள்ளி மூடு விழா நடத்துவதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக சமூக, ஜனநாயக இயக்கங்கள் கண்டித்துள்ளன. 

 

புதுச்சேரியின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேசிய பஞ்சாலைக் கழகத்திடம் இருந்து சிறப்பு நிதிப் பெற்று ரோடியர், சுதேசி, பாரதி ஆகிய பஞ்சாலைகளை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

 

இந்நிலையில்  ஆங்லோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்(AFT) பஞ்சாலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.டி.யு.சி சார்பில் இன்று (17/08/2020) புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அரசு பிறப்பித்துள்ள ஆணையை ரத்து செய்து பஞ்சாலையை தொடர்ந்து நடத்த வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை பஞ்சாலை தொழிலாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.அபிஷேகம் தலைமை தாங்கினார். தலைவர் ரவி, பொருளாளர் தேசிகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா,  மாநில பொதுச்செயலாளர் சேது.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள்,  பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்