
சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, ஸ்ரீமுஷ்னம் வட்டங்களுக்கு உட்கோட்டமாக செயல்படுகிறது. இங்கு திங்கள்கிழமை பல நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை வழங்கவும், தினந்தோறும் அனைத்து வட்டப்பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொது கழிவறை தொடர்ந்து பராமரிக்காததால் சுத்தம் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனைச் சரிசெய்ய வேண்டும் என்றும், சார் ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமாரிடம் கேட்டபோது, “நான் பணியேற்று ஒரு வாரம் ஆகிறது. இதனை உடனடியாக பார்த்து சரிசெய்ய உத்திரவிட்டுள்ளேன். கழிவறையில் இருந்து கழிநீர் செல்லும் இடத்தில் அடைப்பு உள்ளது என்பதால் பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கூறினார்கள். உடனடியாக இதனைச் சரிசெய்தும், இதன் அருகிலே உள்ள காத்திருப்பு கூடத்தில் அலமாரிகள் அமைத்து புத்தகங்கள் வைக்க நடவடிக்கை மேலும் புதியதாக ஒரு கழிவறை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இங்கிருந்த குடிநீர் டேங்கை நகரத்தில் நடைதிருவிழாற்கு நகராட்சி அலுவலர்கள் எடுத்துச் சென்று உள்ளனர். அதனையும் உடனடியாக எடுத்து வருவதற்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.